எம்எல்ஏ சீட் வாங்கி கொடுங்க... மோடியுடன் ‘செல்பி’ எடுக்க வேணும்! ‘ஹெல்ப்லைனில்’ அதிகாரிகளுக்கு டார்ச்சர்

ரேவா: முதல்வரின் ‘ஹெல்ப்லைன்’ எண்ணிற்கு எம்எல்ஏ சீட் கேட்டும், மோடியுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வருவதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநில அரசின் சார்பில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்க முதல்வரின் ‘ஹெல்ப்லைன் எண்: 181’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் பலவித புகார்களை கூறிவந்த நிலையில், தற்போது விநோத புகார்களும், கோரிக்கைகளும் வருகின்றன. இந்த புகார்களில், தியோந்தர் தாலுகாவை சேர்ந்த ஜிதேந்திர மிஸ்ரா  என்பவர், ‘பிரதமர் மோடியுடன்  செல்ஃபி எடுக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

மவுஞ்ச் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வினோத் மிஸ்ரா என்பவர், ‘எனது கிராமத்தில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. எனவே சட்டமன்றத் தேர்தலில் எனக்கு சீட் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேற்கண்ட புகார்கள், கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் அந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் ஷைலேந்திர சிங் கூறுகையில், ‘முதல்வரின் ஹெல்ப்லைனில் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். சட்டசபை தேர்தலில் சீட் கேட்டும், பிரதமருடன் செல்ஃபி எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இவர்களின் மனுக்கள் ஏற்கப்படவில்லை. ஹெல்ப்லைன் எண்ணை பொதுமக்கள் சரியான நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: