மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷரீக், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டது, போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படை அமைத்து மைசூரு, ஷிமோகா, தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மங்களூரு மாநகர எஸ்பி சசிகுமார் உள்ளிட்டோர் மங்களூருவில் குண்டுவெடித்த நகோரி சாலையில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா, இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரியை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயலால் ஈர்க்கப்பட்ட முகமது ஷரீக் கடந்த சில ஆண்டுகளாக சதி செயலை அரங்கேற்றும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார். மங்களூரு போலீசார், கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

குக்கர் வெடிகுண்டு வழக்கை கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாற்றியது. 2 நாட்களுக்கு முன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.வுக்கு கர்நாடக காவல்துறை அனுப்பியுள்ளது.

Related Stories: