ஆர்.கே.பேட்டையில் போலி சான்று தயாரித்து ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு; 3 பேர் கைது

பள்ளிப்பட்டு: சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் ஒருவரின் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி காவல் ஆய்வாளர் சான்று மூலம் ஒரு மர்ம கும்பல் பத்திரப்பதிவு செய்து அபகரித்துள்ளது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரூப் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெயரில் ஆர்.கே.பேட்டையில் ரூ.2 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை உட்பிரிவு செய்யாமல், அவரது மகன், 3 மகள்கள், மனைவி ஆகியோருக்கு ரூப் சிங் பாகப்பிரிவினை செய்துள்ளார். பின்னர், அதன் பவரை தனது மச்சான் சுபாஷ் ஜெயின் சிங் என்பவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், ரூப்சிங்குக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணப் பத்திரம் தொலைந்து விட்டதாக கூறி, அவர்களின் உறவினரும் சோளிங்கர் அரசு பள்ளி ஆசிரியருமான சங்கர் சிங் என்பவர், அம்மையார்குப்பத்தை சேர்ந்த நில புரோக்கர் சரவணன் (49) என்பவரை அணுகியுள்ளார்.

பின்னர் இருவரும் அதே கிராமத்தில் வசிக்கும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் தனசேகர் (39) என்பவரை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து தனசேகர் மூலமாக ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து, ரூப்சிங் நிலத்தின் அசல் ஆவணம் தொலைந்து விட்டது என ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சான்று வழங்கியது போல் 3 பேரும் போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.

 பின்னர் அந்த போலி சான்று மூலமாக, ஆர்.கே.பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் புவனாபாய் என்பவரின் பெயரில் ரூப்சிங்கின் சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் சொத்து பவர் வைத்துள்ள சுபாஷ் ஜெயின் சிங், தன்னிடம் அசல் பத்திரம் இருக்கும்போது, அது தொலைந்துவிட்டதாக காவல் நிலையத்தில் எப்படி சான்று வழங்கப்பட்டது என ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

 

இதைத் தொடர்ந்து, 2 ஆவணங்களையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் ஆய்வு செய்தார். இதில், காவல் ஆய்வாளர் வழங்கியது போல் போலி சான்று தயாரித்து பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி சான்று தயாரித்து நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கர் சிங், புரோக்கர் சரவணன், போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த தனசேகர் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், ரூப்சிங்கின் 7 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்ததாக தெரியவந்தது. பிடிபட்ட 3 பேரிடமும் இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர், வேறு ஏதேனும் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: