×

பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் உதவித்தொகைபெற ஆதார் பதிவு செய்வதில் சிக்கல், மாற்று ஏற்பாடு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணி மற்றும் திருவாலங்காடு பகுதியில் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில்  உதவித்தொகை பெற ஆதார் எண் பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதால் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை பெற முடியும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பத்துக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.6000 ஒன்றிய அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில்  உதவித்தொகை பெற்று வரும் திருத்தணி மற்றும் திருவாலங்காடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கடந்த ஆண்டு பொதுசேவை மையம் மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்ய மையங்களுக்கு சென்றனர். அங்கு  கை ரேகைகள் பதிவு செய்த பின் அவர்களின் செல்போன் எண்ணிற்கு ஓடிபி நம்பர் வரும். ஆனால், பலருடைய கைரேகைகள் பதிவு ஆகாத காரணத்தால் ஓடிபி  நம்பர் வரவில்லை.  இதனால் பல விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.  பொதுசேவை மையத்தில் தங்களுடைய கைரேகைகளை பதிவு செய்யுமாறு மைய நிர்வாகிகள் அறிவுறுத்தினர். அதன்படி ஆதார் மையத்துக்கு சென்றாலும் கைரேகை பதிவாகாததால் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி மாற்று ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை மனு  கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுபோல் விவசாய திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த விவசாயிகள் திடீரென இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, ஒன்றிய அரசும், மாநில அரசும் இறந்துபோன விவசாயிகளின் வாரிசுக்கு உதவித்தொகை கிடைக்கவும், பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் ஆதார் நம்பருக்கு பதிலாக மாற்றுவழி ஏற்படுத்தி விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Kishan Yojanam , Aadhaar Enrollment Problem to Get Grants in Prime Minister's Kishan Scheme, Farmers Urge to Make Alternative Arrangements
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...