×

தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவாளர்கள் டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள GMR தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துவருகிறது.

4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுவருவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும் போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை நியமிக்க திருவாளர்கள் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.

பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவனத்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, இந்நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நாமக்கல் (14.10.2022), தர்மபுரி (15.10.2022), கிருஷ்ணகிரி (15.10.2022, 16.10.2022, 29.10.2022) (ம) 6.11.2022 (ஓசூர்), விழுப்புரம் (15.10.2022), திருப்பத்தூர் (17.10.2022), சேலம் (19.10.2022), பெரம்பலூர் (20.10.2022), திருவண்ணாமலை (20.10.2022),

இராமநாதபுரம் (20.10.2022), மயிலாடுதுறை (21.10.2022), கள்ளக்குறிச்சி (22.10.2022), புதுக்கோட்டை (28.10.2022), ஈரோடு (30.10.2022 (ம) 31.10.2022), சிவகங்கை (2.11.2022), வேலூர் (12.11.2022), மதுரை (15.11.2022), திருநெல்வேலி (17.11.2022), தேனி (17.11.2022), காஞ்சிபுரம் (18.11.2022), திண்டுக்கல் (18.11.2022), தூத்துக்குடி (19.11.2022), செங்கல்பட்டு (19.11.2022), இராணிப்பேட்டை (20.11.2022), விருதுநகர் (22.11.2022), தஞ்சாவூர் (22.11.2022), தென்காசி (23.11.2022), நாகப்பட்டினம் (23.11.2022), நாகர்கோவில் (24.11.2022), திருவள்ளூர் (24.11.2022) ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.  மேற்காணும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 7559 நபர்கள் கலந்து கொண்டனர்.  அவர்களில், 1993 நபர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Minister ,Thangam ,Southern , Employment preference for people from Tamil Nadu in industrial companies located in Tamil Nadu: Minister Thangam Southern State report..!
× RELATED தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு