×

அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்ற தேசிய பால் தினவிழா நிகழ்ச்சி மற்றும் விற்பனை கலந்தாய்வு கூட்டம்

சென்னை; இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் நவம்பர் 26ம் தேதி தேசிய பால் தினமாக 2014 ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (25.11.2022) சென்னை ஆவின் இல்ல வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தேசிய பால் தின கொண்டாட்டம் மற்றும் விற்பனை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தேசிய பால் தின நிகழ்ச்சியில் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆவின் குறித்த சிறந்த வாக்கியங்கள் உருவாக்கும் போட்டி நடைபெற்றது.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஐந்து போட்டியாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பரிசும் பாராட்டு சான்றிதழும்  வழங்கினார்கள். மேலும் நீண்டகாலமாக ஆவின் பால் அட்டையை இணையதளம் மூலமாக பெற்று வருகின்ற சிறந்த நுகர்வோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக  அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒருவருக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கினார்கள். பால் உற்பத்தியாளர்களையும் நுகவோர்களையும் இணைக்கும் இதுபோன்ற  நிகழ்வுகள் தொடர்ந்து  நடைபெறவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

ஆவின் நிறுவனம் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு விதமான பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்ற தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப காஜுகட்லி, காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா , மோத்திபாக் மற்றும் நட்ஸ் அல்வா போன்ற புதிய இனிப்பு வகைகளை விற்பனை செய்துள்ளது. இந்த இனிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.116 கோடி அளவில் விற்பனை நடைபெற்றது. அதே போன்று எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை தொடரும்.

மேலும் வரும் பொங்கல் பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு ஆவினின் 100 ml (நூறு மில்லி) அளவு நெய் பாட்டில்கள் எவ்வித இடர்பாடுமின்றி கிடைக்கும் வகையில் அதன் உற்பத்தியை பெருக்கவும்  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அண்டை மாநிலங்களில்  பால் விலைகளுடன் ஒப்பிடும் பொழுது நமது ஆவின் பால் விலை மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய  அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விற்பனை அதிகரிக்க அறிவுறுத்தினார்கள்.

மேலும் எதிர் வருகின்ற கோடை காலங்களில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வகைகள், மில்க் ஷேக் குளிர்பான வகைகள்,  தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்கவும், பொது மக்களுக்கு தங்குதடையின்றி வழங்கவும் அதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந. சுப்பையன், இணை நிர்வாக இயக்குநர் K.M.சரயு, பொது மேலாளர்கள்  மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.


Tags : National Milk Day ,sales ,Minister ,S.M. Nassar , National Milk Day program and sales consultation meeting held under the chairmanship of Minister S.M. Nassar
× RELATED ₹60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்