×

ஓட்டல் அதிபர் கொலை வழக்கு, பஸ் ஸ்டாப்பில் கொலையாளியை மடக்கி பிடித்த மோப்பநாய்; மேகா சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலம் அரியானூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (60). இவர் அந்த பகுதியில் தாபா ஓட்டலை குத்தகைக்கு எடுத்து, அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். நேற்று அதிகாலை ஓட்டல் வளாகத்தில் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அதே தாபா ஓட்டலில் வேலை பார்த்து வந்த சமையல் மாஸ்டரான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை பகுதியை சேர்ந்த ஜோசப் (24) என்பவர், கந்தசாமியை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியிருப்பது தெரியவந்தது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, ஜோசப் கொலையில் ஈடுபடும்போது போட்டிருந்த சட்டையை தண்ணீரில் அலசி கொடியில் காயப்போட்டிருந்தார். அந்த தடயத்தை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றினர். அதே நேரத்தில், மோப்பநாய் மேகாவுடன் அதன் பயிற்சியாளர்கள் வந்தனர்.

அவர்கள், ஜோசப் தண்ணீரில் அலசி போட்டிருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை மோப்பநாய் மேகாவை கொண்டு மோப்பம் பிடிக்க வைத்து, ஓடச் செய்தனர். தாபா ஓட்டலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிச் சென்று அரியானூர் பஸ் ஸ்டாப் பகுதிக்கு சென்றது. அங்கு 1008 சிவலிங்கம் கோயிலுக்கு செல்லும் இடத்தில் இருக்கும் புதருக்குள் திடீரென மோப்பநாய் மேகா பாய்ந்து சென்றது. அங்கு ஒரு வாலிபர் பதுங்கியிருந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில், கந்தசாமியை கொலை செய்துவிட்டு தப்பி வந்த ஜோசப் எனத்தெரியவந்தது.

உடனே அவரை போலீசார் கைது செய்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தாபா ஓட்டலில் இருந்த பிரிட்ஜில் இருக்கும் மோட்டாரை திருட முயன்றதை கந்தசாமி பார்த்துவிட்டார். ஏன் திருடுகிறாய் எனக்கேட்டு தகராறு செய்தார். அப்போது கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்தார். பின்னர், ஜோசப்பை கொலை வழக்கில் கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளியை கைது செய்த டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான போலீசாரை மாவட்ட எஸ்பி அபிநவ் பாராட்டினார். மேலும், 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று கொலையாளியை பஸ் ஸ்டாப் அருகே புதரில் மடக்கி பிடித்த மோப்பநாய் மேகாவையும், அதன் பயிற்சியாளரான எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான குழுவினரையும் எஸ்பி வெகுவாக பாராட்டினார்.



Tags : Mega Salem , Hotel owner's murder case, sniffer dog caught the killer at the bus stop; Excitement in Mega Salem
× RELATED ஓட்டல் அதிபர் கொலை வழக்கு, பஸ்...