மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தொழில்முனைவோர் உண்ணாவிரதம்: 25 ஆயிரம் தொழிற்கூடங்கள் அடைப்பு

கோவை: மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கோவை பவர் ஹவுஸ் டாடாபாத்தில் தொழில் கூட்டமைப்பின் சார்பில் தொழில்முனைவோர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 18 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி 25 ஆயிரம் சிறு, குறு தொழில்கூடங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த பேட்டி: குறு சிறு தொழில் நடத்துபவர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா தொற்று, மூலப்பொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டண உயர்வு சம்பந்தமாக கோவை, மதுரை, சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது, இந்த கூட்டத்தில் பங்கு எடுத்த அனைவரும் மின்கட்டணத்தை ஏற்ற கூடாது என்றும், தற்போது உள்ள சூழ்நிலையில் மின்கட்டணம் உயர்த்தினால் தமிழகத்தில் தொழில்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என கருத்து தெரிவித்தனர். தொழில் முனைவோர்களின் வேண்டுகோள்களுக்கு செவி சாய்க்காமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறு சிறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு மின்கட்டணத்தை 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர்.

8 முதல் 10 சதவீதம் கூட லாபம் இல்லாமல் தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு இந்த கட்டண உயர்வு தமிழகத்தின் அடையாளமான சிறு குறு தொழில்களை அழித்து விடும்.

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, இன்று கோவை பவர் ஹவுஸ் டாடாபாத்தில் தொழில் கூட்டமைப்பின் சார்பில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறோம். அதுபோல் இன்றைய தினம் தொழில் முனைவோர்கள் ஒருநாள் கதவடைப்பு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: