×

குறுக்கு விசாரணையின்போது பெண்ணிடம் பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி; உத்தரவில் வருத்தம் தெரிவித்த நீதிபதி: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாராட்டு

சென்னை: பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின்போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்கு, மேல்முறையீட்டு மனு தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் சங்ககிரி தாலுகா வேலகல்பட்டியில் உள்ள சொத்து தொடர்பாக லீலாவதி, சீனிவாசன் ஆகியோருக்கும் கமலா, மலர்கொடி ஆகியோருக்கும் இடையே பாகப்பிரிவினை வழக்கு தர்மபுரி கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் கடந்த 2015ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லீலாவதி, சீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணை குறித்து நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், நீதிமன்றத்திலேயே நீதிபதி முன்பே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால், அதற்காக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டு கொள்கிறது.
மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை.

தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் வழக்கறிஞர்களின் கேள்விகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு வழக்கில் வழக்கறிஞரின் கேள்விக்காக நீதிபதியே வருத்தம் தெரிவித்ததற்கு, வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : Madras High Court , Lawyer questions rudely to woman during cross-examination; Judge expressed regret at the order: Appreciation of Madras High Court lawyers
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...