×

முன்னாள் டிஜிபி, நடிகர் விஷ்ணு மீது ரூ.2.70 கோடி மோசடி வழக்கு: 3வது முறையாக நடிகர் சூரியிடம் விசாரணை

சென்னை: வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்தவர் சூரி. இவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஒன்று, இரண்டு படங்களிலும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சூரி பெரிய அளவில் நிலங்கள் வாங்க முடிவு செய்தார். அதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷாலிடம் கூறியுள்ளார். உடனே விஷ்ணு தனது தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மூலம் நிலங்கள் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலுக்கு உறுதி அளித்தாராம். அதன்பேரில் நடிகர் சூரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மூலம் ரூ.2.70 கோடியை, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் கொடுத்தாராம்.

அதன்படி நடிகர் சூரிக்கு நிலமும் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிலத்திற்கு செல்ல வழியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனக்கு அந்த நிலம் வேண்டாம் என்று நடிகர் சூரி கூறியுள்ளார். அதனால், வேறு ஒரு இடத்தில் நிலம் வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் சொன்னபடி நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுக்கவில்லையாம். இதனால் கொடுத்த பணத்தை கேட்ட போது, கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு மீதம் ரூ.1.40 கோடி பணத்தை கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் சூரி அடையார் காவல் நிலையத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார்.

அப்போது அதிமுக ஆட்சி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பிறகு நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடையார் காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றி 6 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதைதொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சூரி வழக்கை விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த மார்ச் 28ம் தேதி நடிகர் சூரியிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அதைதொடர்ந்து 2வது முறையாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி 9 மணி நேரம் நடிகர் சூரியிடம் உதவி கமிஷனர் ஜான் விக்டர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நடிகர் சூரி அளித்த தகவலின் படி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணுவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.இந்த வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் சூரி முன்னுக்கு பின் முரணாக சில தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூரிக்கு தரவேண்டிய ரூ.1.40 கோடி பணத்திற்கு சினிமா நடித்து தருவதாக ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை நடிகர் சூரி முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நடிகர் சூரியிடம் 3வது முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, வழக்கு தொடர்பான சில சந்தேகங்களுக்கான ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டிருந்தனர். ஆனால் நடிகர் சூரி அந்த ஆவணங்களை இந்த முறையும் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் வழக்கு தொடர்பாகவும், பணம் கொடுத்தற்கான விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் நடிகர் சூரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : DGB ,Vishnu ,Sun , Rs 2.70 crore fraud case against former DGP, actor Vishnu: Investigation of actor Suri for the 3rd time
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்