டி.கல்லுப்பட்டி அருகே 16ம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே மோதகம் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

மோதகம் கரையாம்பட்டியை சேர்ந்த பூசாரி முத்துசாமி தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர்கள் அனந்தகுமரன், தமிழ் செல்வம் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதில், கிபி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து முனீஸ்வரன் கூறியதாவது: பாண்டியர் காலத்தில் செங்குடிநாட்டின் எல்லைக்குட்பட்ட மோதகம் வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கி இருந்தது. இவ்வூரில் பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், மக்கள் வசிப்பிடம் இல்லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி, தாதமடம் போன்ற நான்கு கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போது இருக்கின்றது.

சங்ககாலம் முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீரனுக்கு நினைவாக நடுகல் நடப்பட்டு தமிழ் சமூகம் காவல் தெய்வமாக வழிபட்டு வருகிறது. திருமங்கலம் ராஜபாளையம் பிரதான சாலையில் கரையாம்பட்டி விலக்கு வடக்கு திசையில் முட்புதரில் எழுத்துகள் கொண்ட நடுகல் கண்டறியப்பட்டது. மூன்று வரி கொண்ட எழுத்துக்கள் வாணன், உட்பட்ட என்ற வரியைத் தவிர மற்ற எழுத்துக்கள் முற்றிலும் தேய்மானத்தோடு காணப்பட்டதால் பொருள் அறியமுடியவில்லை.

நடுகல் நான்கு அடி உயரம் 2 அடி அகலம் கொண்டது. இதில் ஆண், பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி அமர்ந்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

 இச்சிற்பம் வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

 கபோதத்துடன் கூடிய மூன்று நாசிக் கூடுகள் அழகான தோரணை வாயில் கொண்டு உள்ளது. சிற்பத்தின் எழுத்து வடிவம் மற்றும் உருவ அமைப்பை பொறுத்தமட்டில் கிபி 16ம் நூற்றாண்டு சேர்ந்த சிற்பம் என்று கருதலாம். இச்சிற்பத்தை பார்க்கும்போது இப்பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர் பரம்பரையை சேர்ந்தவராக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: