ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 158 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

ராணிப்பேட்டை: வடகிழக்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 158 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி, கடைவாசல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகிறது. பருவமழையால் ஏற்படும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை ஆகியன ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தயார் நிலையில் உள்ளது.

மேலும், மழைநீர் வெள்ளம் எளிதாக வெளியேறும் வகையில் வடிகால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் மண்டிக்கிடந்த புதர்கள் அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல இடங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருவதால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீரானது ஆற்றுக்கால்வாய்கள்  மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 369 ஏரிகளை நிரப்ப திருப்பிவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 158 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீரானது கடைவாசல் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 158 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது.

6 ஏரிகள் 76 சதவீதத்திற்கு மேலாகவும், 64 ஏரிகள்  51 சதவீதத்திற்கு மேலாகவும், 111 ஏரிகள் 50 சதவீதம் வரையும், 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நிரம்பியுள்ளது.

மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளையும் சேர்த்து 8.52 டிஎம்சி வரை நீர் சேமிக்கப்படும்  நிலையில், தற்போது 6.36 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

Related Stories: