விருதுநகர் மாவட்டத்தில் பருவமழையால் 95 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயப் பணிகள் விறுவிறு

*நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மழையை நம்பி, 95 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தில் முதன்மை மாவட்டமாக இருந்த விருதுநகர் மாவட்டம் தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில்கள் காரணமாக இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 1.55 லட்சம் ஹெக்டேராக இருந்த விவசாய நிலப்பரப்பளவு தொழில் வளர்ச்சி, பருவமழை பொய்த்தல், கூலியாட்கள் பற்றாக்குறையால் படிப்படியாக சுருங்கி 1.22 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.

1.16 லட்சம் ஹெக்டேர் சாகுபடி

வடகிழக்கு பருவமழை காலத்தில் 1.16 லட்சம் ஹெக்டேர் வரை சாகுபடி நடைபெறுகிறது. மாவட்டத்தில் ஜன.,பிப். குளிர்காலத்தில் 42.8 மி.மீ. மார்ச் முதல் மே வரையிலான கோடையில் 161.5 மி.மீ., ஜூன் முதல் முதல் செப். வரையிலான தென்மேற்கு பருவமழையில் 196.8 மி.மீ. அக்.முதல் மழை என 820.10 மி.மீ மழை பொழிவு சராசரியாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் 2015, 2019, 2020, 2022 சராசரியை விட கூடுதல் மழை பொழிவு இருந்தது. மற்ற ஆண்டுகளில் சராசரியை விட குறைவான மழையே பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பருவம் தவறி மழை, படைப்புழு தாக்கம் காரணமாக விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

நடப்பாண்டில் மழை

நடப்பு ஆண்டில் அக்.மாதம் 122 மி.மீ. நவ. மாதம் 145 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நவ.22 வரை நடப்பாண்டில் 757.85 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரி மழையை ஒட்டி மழை பதிவாகி இருந்தாலும், பெய்த மழை அனைத்தும் காட்டுமழையாக பெய்துள்ளது. அணைகள், கண்மாய்களுக்கு நீர்வரத்து இருக்கும் வகையில் மழை பொழிவு இல்லை. டிச.வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருப்பதால் மழை பெய்யுமா என்ற கேள்வியும் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

மாவட்டத்தில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, இருக்கன்குடி, சாஸ்தா கோயில் ஆகிய 8 அணைக்கட்டுக்கள், 708 ஊராட்சிகள் கண்மாய்கள், 290 பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்பட 1038 கண்மாய்கள், 33,351 பாசன கிணறுகள் உள்ளன.

ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுது காரணமாக வரும் மழைநீர் முழுமையாக வெளியேறி அணை காலியாக இருக்கிறது. மற்ற 7 அணைகளில் பாதிக்கும் குறைவான மழைநீரும், கண்மாய்களின் வரத்து கால்வாய், ஆக்கிரமிப்புகளால் விவசாயத்திற்கு தேவையாக நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி வருகிறது.

95 ஹெக்டேரில் விவசாய பணிகள்

இருப்பினும் மழையை நம்பி மாவட்டத்தில் அக்.மாதம் வரை நெல் 14,413 ஹெக். மக்காச்சோளம் 24,518 ஹெக், சிறுதானியங்கள் 11,188 ஹெக், பயறு வகைகள் 3,671 ஹெக், பருத்தி 15,796 ஹெக், கரும்பு 1,033 ஹெக், எண்ணெய் வித்து பயிர்கள் 2,212 ஹெக் என 72,831 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி நடந்துள்ளது. பழப்பயிர்கள் 7,633.91 ஹெக், காய்கறிகள் 1,638.91 ஹெக், வாசனை பயிர்கள் 1,299.07 ஹெக், மலைப்பயிர்கள் 10,554.85 ஹெக், மருத்துவ பயிர்கள் 688.97 ஹெக், மலர் பயிர்கள் 441.35 ஹெக் என தோட்டக்கலை பயிர்கள் 22,257 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 95,088.06 ஹெக்டேரில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படைப்புழுவால் பாதிப்பு

கடந்த ஆண்டுகளில் படைப்புழு தாக்கம் காரணமாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். நடப்பு ஆண்டு அக். மாதம் வரை மாவட்டத்தில் 24,518 ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், காட்டுப்பன்றிகள், மான்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன்: காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்த, கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களை நம்பியே சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றியக் கண்மாய்கள் மேடு தட்டி, மடைகள், கலுங்குகள் உடைந்து கிடக்கிறது. அவற்றை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும், விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: