×

பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் திருடிய 5 பேர் கொண்ட கும்பல் கைது-54 பவுன் பறிமுதல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் திருட்டில்  ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.   பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில மாதமாக, இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை சிலர் நோட்ட மிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க, கிழக்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். மேலும், திருட்டு கும்பலை தேடி ஈரோடு, பவான உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் நேற்று முன்தினம், பவானி பஸ் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 5பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். விசாரணையில், பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை, பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் திருவரங்கம்பட்டியைசேர்ந்த மணி என்ற பாலகி ருஷ்ணன்(36), குலசேகரபட்டிணத்தை சேர்ந்த ஸ்ரீராமன்(38), திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தை சேர்ந்த அந்தோனி என்ற அருண்பாண்டியன் (22), தென்காசியை சேர்ந்த மணிகண்டன்(28), சேர்மன்துரை(28) என்பதும், அவர்கள் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பல வீடுகளில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிழக்கு போலீசார், திருட்டு கும்பலை சேர்ந்த 5பேரையும் கைது செய்ததுடன், பல்வேறு இடங்களில் திருடி பதுக்கிய 54 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். பின், பொள்ளாச்சி ஜேஎம்1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

சிறையில் ஒன்று சேர்ந்த கும்பல்: போலீசார்  கூறுகையில், ராமன் ஒரு போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருக்கும்போது, ஏற்கனவே சிறையில் இருந்த சேர்மன்துரை, பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின், சிறையிலிருந்து மூவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே வந்தவுடன், பொள்ளாச்சி பகுதியில் உள்ள பல இடங்களில், ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் திருடியதுடன், வழிப்பறியில் ஈடுபட்டு வைத்திருந்த நகைகளை, பாலகிருஷ்ணன் விட்டில் பதுக்கியது தெரியவந்தது. அப்போது இதற்கு, உடந்தையாக மணிகண்டன், அருண்பாண்டியன் ஆகியோர்  இருந்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு இடங்களில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன’ என்றனர்.


Tags : Pollachi , Pollachi: The police arrested a gang of 5 people who were involved in theft at various places in Pollachi. 54 pounds of jewelry from them
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...