×

வேலூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் கழிவறை கதவுகள், டாய்லெட்டுகள், பைப்புகள் உடைப்பால் பயணிகள் அவதி

*திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்
*திருப்பத்தூருக்கு ஒருங்கிணைந்த பஸ்நிலையம் தேவை

வேலூர் : வேலூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் கழிவறை கதவுகள், டாய்லெட்டுகள், பைப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. வெளியே கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் திருப்பத்தூருக்கு ஒருங்கிணைந்த பஸ்நிலையம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் நகராட்சி நிலை உயர்ந்து 2008ல் மாநகராட்சியானது. இந்நகரின் மக்கள் தொகை 10 லட்சம். இந்நிலையில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை, அதனால் நகரில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு செல்லியம்மன் கோயில் பின்புறம் புதிய பஸ் நிலையம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், இப்புதிய பஸ் நிலையத்தாலும் பயனில்லாத நிலையில், வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹53.13 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கி இந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.

முதலில் 3 அடுக்கு பஸ் நிலையம் என்று பேசப்பட்டு, பின்னர் 2 அடுக்கு, தற்போது ஓரடுக்கு பஸ் நிலையமாகவே அதே இடநெருக்கடியுடன் வேலூர் புதிய  பஸ் நிலையம் கட்டமைக்கப்பட்டதாகவும், இத்திட்டப்பணியில் முறைகேடுகள் கடந்த ஆட்சியில் நடந்ததாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே சரியான கட்டமைப்புகள் இல்லை என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவி வரும் நிலையில், அதற்கேற்ப புதிய பஸ் நிலையத்தில், கழிவறை கதவுகள், வெஸ்டர்ன் டாய்லெட்கள், பைப்புகள் உடைக்கப்பட்டுள்ளன.

மேலும் 68 கடைகள் தவிர, பயணிகள், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வறைகள், போக்குவரத்துக்கழகங்களின் புக்கிங் சென்டர்களுக்காக அமைக்கப்பட்ட அறைகள் கதவுகள் இன்றியே கட்டப்பட்டுள்ளன. மேலும், இலவச கழிவறை வளாகம் திறக்கப்படாமல் அதன் முன்புள்ள பிளாட்பாரம் வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது. பஸ் நிலையம் வெளிப்பகுதியில் கழிப்பிடம் இல்லாததால் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள காலியிடம் திறந்தவெளி கழிவறையாக மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, இக்குறைகளை களைந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தை சீரமைப்பதுடன், விரிவாக்கமும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், திருவண்ணாமலையில் பெருகி வரும் மக்கள் தொகை, பவுர்ணமி கிரிவல நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்போதைய பஸ் நிலையத்தை தவிர்த்து திருவண்ணாமலை டான்காப் வளாகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ₹50 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, பஸ்நிலைய தேவைகள் அதிகம் உள்ளதால், டெண்டர் விரைவில் விடப்பட்டு பணிகள் முடிப்பதுடன், தற்போதுள்ள பஸ் நிலையத்தில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ராணிப்பேட்டையில் பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் வி.சி.மோட்டூருக்கும், முத்துக்கடைக்கும் இடையில் ஆட்டோ நகரில் லாரிகள் நிறுத்துமிடத்தில் 3.95 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ₹10.25 கோடியில் பஸ் நிலையம் கட்ட கடந்த செப்டம்பர் 7ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டமாக வேலூரில் இருந்து  பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை தற்போது மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது.

ஆனாலும் ராணிப்பேட்டையை பொறுத்தவரை வந்து நின்று செல்லும் பஸ்களே அதிகம் என்பதால் சிறிய அளவில் திட்டமிடப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணியை விரிவுபடுத்தி, ஒருங்கிணைந்த பஸ்நிலையமாக மாற்றி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்டு தற்போது மாவட்ட தலைநகராக பரிணமித்துள்ள திருப்பத்தூர் நகரின் தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையத்தில் கூடுதல் கழிவறைகளை கட்டுவதுடன், அதன் பிளாட்பாரங்களை மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக மாற்றி, மாவட்ட தலைநகர் பஸ் நிலையம் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும். மேலும் ஜோலார்பேட்டையில் ரயில்நிலையம் உள்ளதால், அங்கு பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. இப்படி 4 மாவட்டங்களில் உள்ள பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

பஸ் நிலைய கடைகள், அறைகள் நிலை

வேலூர் புதிய பஸ் நிலைய தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதலுதவி மையங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வறை, போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வறை, போலீஸ் அவுட் போஸ்ட் அறை, பஸ் நிலைய கண்காணிப்பு கேமராக்களுக்கான காவல் கட்டுப்பாட்டு அறை போன்றவை தவிர்த்து 68 கடைகள் உள்ளன.

போலீஸ் புறக்காவல் நிலையம்

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இதுவரையிலும் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அதோடு பஸ்
நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளும் இன்னும் திறக்கப்படாததால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அரைகுறை நிலையிலேயே தான் பஸ்நிலையம் இயங்கி வருகிறது.

Tags : Vellore , Vellore: While the new bus station in Vellore has come into use, the toilet doors, toilets and pipes have been broken. outside
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...