×

திருச்சானூரில் 5ம் நாள் வருடாந்திர பிரமோற்சவம் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு தாயார் அருள்-திரளான பக்தர்கள் வழிபாடு

திருமலை : திருச்சானூரில் நேற்று 5ம் நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை மற்றும் இரவு இரு வேலைகளிலும் தாயார் சின்ன சேஷம், பெரிய சேஷம், அன்னம், சிம்மம், முத்து பந்தல் என  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் 5வது நாளான முக்கிய வாகன சேவையான கஜ வாகன சேவை நேற்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து லட்சுமி ஆரம்  ஊர்வலமாக திருச்சானூருக்கு திருமலை திருப்பதி தலைமை செயல் அதிகாரி தர்மா தலைமையில் கொண்டு வரப்பட்டது. பின்னர், சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டது. மகாலட்சுமி அலங்காரத்தில் கஜ வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை 4 மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா? கோவிந்தா? என்ற பக்தி முழகத்திற்கு மத்தியில் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

முன்னதாக, நேற்று காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவிற்கு முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் முழக்கங்களுக்கு மத்தியில் குதிரைகள், காளைகள் மற்றும் யானைகள் முன்னால் அணிவகுத்து சென்றனர். மதியம்  கிருஷ்ண சுவாமி மண்டபத்தில் தாயாருக்கு   மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை வசந்த உற்சவம் நடைபெற்றது.  சுவாமி வீதி உலாவில் ஜீயர்கள்,  சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ  செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி தம்பதிகள், இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தம்பதிகள், ஆகம ஆலோசகர் நிவாசாச்சாரியார், கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம், கோயில் அர்ச்சகர் பாபு சுவாமி, கண்காணிப்பாளர் சேஷகிரி, ஆர்ஜிதா இன்ஸ்பெக்டர் தாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரமோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்திலும், மாலை 4.20 மணிக்கு தங்க ரதத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாடவீதியில் தாயார் வீதியுலா நடைபெற உள்ளது. இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா  நடைபெறும்.பிரமோற்சவத்தையொட்டி, சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி தம்பதியினர்  பட்டு வஸ்திரம் வழங்கினர். பின்னர், சுவாமி  தரிசனம் செய்த அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தும்மலகுண்டா  கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து பல ஆண்டுகளாக தாயார் கார்த்திகை பிரமோற்சவத்தில் கஜ வாகன சேவைக்காக பட்டு வஸ்திரம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்றார். அப்போது, இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வெண்பட்டு குடைகள் நன்கொடை

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று  திருநின்றவூரை சேர்ந்த ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளையின்  அறங்காவலர்  ராமமூர்த்தி தலைமையில் 2 வெண்பட்டு குடைகள் கொண்டு வரப்பட்டன. இந்த குடைகள் கோயில் முன்பு அறங்காவலர் குழு உறுப்பினர் செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி மற்றும் இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் ஆகியோரிடம்  வழங்கினர். இந்த குடைகள் பிரமோற்சவத்தில் வாகன சேவைகளிலும் மற்ற நாட்களில்  வீதி உலாவின் போது சுவாமிக்கு அலங்கரித்து கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pramotsavam ,Tiruchanur ,Mohini Akaraman , Tirumala: Mother Padmavati graced the devotees in Mohini adornment on the 5th day of the annual Pramotsavam at Tiruchanur yesterday.
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...