அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியில் நங்காஞ்சிஆறு உள்ளிட்ட பகுதிகளில் சீமைகருவேல முட்கள் காடுபோல வளர்ந்துள்ளது. சுகாதாரக் கேடு மற்றும் நீராதாரத்தை அழிக்கும் சீமைகருவேல முட்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள நிலங்கள், ஊருக்குள் முக்கிய தெருவோரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆறு உள்ளிட்ட வறண்ட நீர் நிலைகள் என்று எங்கு நோக்கினும் சீமை கருவேல முட்கள் வளர்ந்துள்ளன.இதில் தங்கி உற்பத்தியாகும் கொசுக்களால் இப்பகுதியில் வசிப்பவர்கள் கொசுக்கடியினால் அவதிப்படுகின்றனர். அரவக்குறிச்சி தெற்கே குமரண்டான்வலசு ஈஸ்வரன் கோவிலில் இருந்து கரடிபட்டி வரை நங்காஞ்சி ஆற்றின் மேற்கு கரையோரம் அரசு தலைமை மருத்துவமனை, போலீஸ் குவார்ட்டர்ஸ், எஸ்பிநகர், கார்த்திநகர், தாலுகா அலுவலகம், கிழக்குத்தெரு, முதலியார் தெரு, போஸ்ட் ஆபிஸ் பின்புறம் மற்றும் கரடிபட்டி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.

மக்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகிலேயே நங்காஞ்சி ஆறு மற்றும் அதன் கரையோர பகுதியிலும்,அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் கிழக்கு பகுதியில் நங்காஞ்சி ஆறு முழுவதும் சீமை கருவேல முட்கள் காடுபோல வளர்ந்துள்ளது. இதனால இந்த இடத்தில் தண்ணீர் தேங்குகின்றது. இதனால் ஆற்றில் சாக்கடை உள்ளிட்ட கழிவுகள் தேங்குவதால் இப்பகுதி முழுவதும் அதிகஅளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து துன்புறுத்துகின்றது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கடியினால் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நேரய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயக் கிணறுகள், வீடுகளிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் உள்ளிட்டவைகளில் காடுபோல் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் வேர்கள் பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஆதாரங்களை அழிக்கின்றன. இதனால் இப்பகுதியில் எதிர் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், சுற்றுப் பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பயிரிட்டுள்ள முருங்கை பயிர் உள்ளிட்ட விவசயம் கடுமையாக பாதிக்கும் என்றும் இப்பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் முற்றிலுமாக அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஆற்றோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக ஆறு பாதுகாக்கப்படுவதுடன், வெள்ள காலங்களில் எவ்வித பயமும் இல்லாமலும் இருக்கும். சுற்றுப்பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதுடன் சுற்றுச்சூழலும் காப்பாற்றப்படும் என பொதுநல ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே அரவக்குறிச்சி பகுதியில் நங்காஞ்சி ஆறு மற்றும் ஊருக்குள் வளர்ந்துள்ள சீமை கருவேல முட்புதர்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: