சிறப்பு பேருந்து இயக்க கோரி உயர்கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை-அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனாவுக்கு பின் நிறுத்தப்பட்ட மாணவர் சிறப்பு பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரகம் (பிப்மேட்) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 புதுவையை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் இருந்து நகரப்பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு சார்பில் ரூ.1க்கு  மாணவர் சிறப்பு பேருந்து விடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் பெற்று வந்தனர்.  கொரோனா காலத்தின் போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் இந்த பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டது.

 தற்போது பள்ளி, கல்லூரிகள் துவங்கி ஓராண்டு ஆகியும் இதுவரை மாணவர் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பகுதியிலிருந்து வரும் மாணவ, மாணவிகள் தினமும் தனியார் பேருந்தில் சென்று வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.50 பேருந்து கட்டணத்துக்கு செலவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட மாணவர் சிறப்பு பேருந்தை உடனடியாக இயக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இதனை தொடர்ந்து நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (பிப்மேட்) அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கல்வி இயக்குனரக தனி அதிகாரி சவுமியா, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து இன்னும் 20 நாட்களில் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் தாகூர் கலைக்கல்லூரி, காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: