×

பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுமா?

*21 கண்மாய்கள், 40 ஊரணி குளங்கள் நிரம்பும்

*விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதியாகவும், மலை வளங்களும், நீர்வளங்களும் மிகுந்த பகுதியாக உள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தாலும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஒரு கண்மாய்கள் கூட இன்று வரை நிறையவில்லை. அதற்கு காரணம் தேனி மாவட்டத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கிய நிதியில் பணிகள் எதுவும் முழுமையாக செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தான். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், 150க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளனர். இந்த கிராமங்களில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர். தேக்கி வைத்து, இருப்பு தண்ணீரை பயன்படுத்துவதற்கும், ஆறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதற்கும் இந்த பகுதிகளில் போதிய வசதி இல்லை.

வைகை அணை ஆண்டிபட்டி பகுதியில் இருந்தாலும் ஆண்டிபட்டி கிராம மக்களுக்கு பயன்படாத ஒன்றாக வைகை அணை அமைந்துள்ளது. ஆண்டிபட்டி கிராம மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இதனால் விவசாயம் பாதியளவு குறைந்து நெல், முந்திரி, வாழை போன்ற பெரிய அளவில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது மழையை எதிர்பார்த்து மானாவாரி பயிர்களை மட்டும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆண்டிபட்டி கிராம பகுதி மக்கள் தங்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி திப்பரவு அணைத்திட்டத்தை ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிக்கு கொண்டு வருவதற்க்கு முடிவெடுக்கப்பட்டது. வைகை அணையில் இருந்து கால்வாய் மூலம் ஆண்டிபட்டியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதே இந்த திப்பரவு அணை திட்டம்.

இதற்க்காக 1984ம் ஆண்டு திப்பரவு அணை திட்டத்திற்க்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அத்தோடு சரி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திப்பரவு அணைத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் எம்.ஜிஆர் மட்டுமல்ல ஜெயலலிதா மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நின்ற அனைவரும் வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு இதனை கண்டுகொள்ளவில்லை.

திப்பரவு அணைத்திட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட நிலையில், அந்த இடங்கள் தற்போது ஆக்கிரமிப்பு செய்து, வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இனிமேல் திப்பரவு அணை திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்று அதற்காக திப்பரவு அணை திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தனர்.

அதன் மூலம் விவசாயிகள், திப்பரவு அணைத் திட்டத்திற்கு பதிலாக பெரியாறு ஆற்றில் இருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை பொறியாளர்கள் உதவியுடன் வரைவு திட்டத்தை தயார் செய்தனர். மூலவைகை ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கின் போது வரும் கூடுதல் தண்ணீரையும், பெரியாற்றில் வரும் உபரிநீரையும் இணைத்து குழாய் மூலம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து குளம், கண்மாய், ஊரணி போன்றவற்றில் நிரப்பப்படும்.

இந்த திட்டம், பெரியாறு, குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு கண்டமனூர், கணேசபுரம் வழியாக ஏத்தக்கோவில் வரை சுமார் 58 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். இதன் மூலம் கணேசபுரம், புதுக்குளம் கண்மாய், விருமானுத்து கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், அம்மாபட்டி மூம்மூர்த்தி கண்மாய், கொத்தப்பட்டி புல்லுவெட்டி கண்மாய், அதிகாரி கண்மாய் உள்ளிட்ட 21 கண்மாய்களும், 40 ஊரணி குளங்களிலும் தண்ணீர் நிரப்பப்படும். மேலும் இதன் மூலம் சின்னமனூர் அருகே மேட்டுப்பகுதியான ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளும் பயன்பெறும். இந்த கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படுவதால் விவசாயத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

பெரியாறு அணையில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கொண்டு வருவதற்கு திமுக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் இந்த திட்டம் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் தூரம், எவ்வளவு அளவு தண்ணீர், தண்ணீரை கடத்தும் குழாயின் விட்டம், தொழில் நுட்ப விபரம், தற்போதைய விலை நிலவரப்படி தயாரிக்கப்பட்டு, ரூ.256.30 கோடியில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பினர்.

முதல்வர் நிறைவேற்றுவார்

இதுகுறித்து ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆண்டிபட்டி மிகவும் வறட்சியான பூமியாக உள்ளது. மழையளவும் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி பலத்த மழை பெய்தாலும் எங்கள் பகுதிக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு, விவசாயத்திற்கு பிரச்னை இல்லாமல் இருக்கும். மேலும் அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Antipatti ,Periyar , Andipatti: Theni district is rich in natural resources, mountain resources and water resources. But, honey
× RELATED நாளை வாக்குப்பதிவு வெளியாட்களை வெளியேற்ற போலீசார் அதிரடி சோதனை