×

மாவட்டம் முழுவதும் 1,100 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு-கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,100 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: கால்நடைகள் இறப்பால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து கால்நடை வளர்ப்போரை பாதுகாக்க  கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசால்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டு பங்களிப்பு தொகை கால்நடை வளர்ப்போரிடம் இருந்து பெறப்பட்டு, அரசின் மானிய தொகையுடன் செயல்படுத்தப்படும். நாட்டினம், கலப்பினம், அயலின, கறவை மாடுகள், எருமைகள் அன்றைய சந்தை விலைப்படி காப்பீடு செய்யப்படுகின்றன. கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஓராண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். 2020-2021ம் ஆண்டில் தேசிய கால்நடை இயக்கம் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆயிரத்து 100 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வைத்திருப்போர் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். நபர் ஒருவருக்கு ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்படும். கறவை பசு, எருமை இவ்வினங்கள் இரண்டரை வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் ஒன்று முதல் 3 வயதிற்குள் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளோருக்கு 50 சதவீதம்  மானியத்திலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியத்திலும் காப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் அருகில்  உள்ள கால்நடை உதவி  மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்….

The post மாவட்டம் முழுவதும் 1,100 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Collector ,Chandrakala ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...