×

கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் ஒரேநாளில் 11 கம்பங்கள் நடப்பட்டு தெருவிளக்கு-அமைச்சர் அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஜீவா நகரில், அமைச்சர் மெய்யநாதனின் அதிரடி நடவடிக்கையால் ஒரேநாளில் 11 மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஜீவாநகர் கடந்த 11ம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின.

வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.
ஜீவா நகரில் மிகவும் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.

இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் அங்குள்ளவர்கள் அவதி அடைந்து வந்தனர்.இந்நிலையில் வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தார்.

அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான ஐந்து மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து மிகப் பழமையான மின்கம்பங்களையும் உடனே அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்பேரில் ஒரே நாளில் நேற்று முன்தினம் ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன.
இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக ஐந்து மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்ய நாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Vettangudi ,Kollidam ,Minister , Kollidam: In Vetangudi Jiva Nagar near Kollidam, 11 electric poles were uprooted in one day due to the action taken by Minister Meiyanathan.
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது