×

அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13,293 சதுர அடி பரப்பளவு கொண்ட நாடக கொட்டாய் இடத்தினை அமைச்சர் சேகர்பாபு இன்று (25.11.2022) பார்வையிட்டு ஆய்வு செய்து, அவ்விடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
    
அதனைத் தொடர்ந்து, வார்டு-60க்குட்பட்ட அங்கப்ப நாயக்கன் தெருவில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 1,680 ச.அ. பரப்பளவு கொண்ட  இடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவ்விடத்தில் சென்னை உருது நடுநிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சட்டத்தின் துணை கொண்டு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை கொண்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேயர், மதிப்பிற்குரிய ஆணையாளர் ஆகியோரின் தீவிர முயற்சியின் காரணமாக, வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாடகக் கொட்டாய் இடமானது தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடம் 13,293 சதுர அடி பரப்பளவு கொண்டது.  இந்த இடம் மிகவும் பெருமைக்குரிய இடம்.  திராவிடத்தின் தூண்டல் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., நடிகவேல் எம்.ஆர்.இராதா ஆகியோர் கலைத்துறைக்காக பயன்படுத்திய பழமை வாய்ந்த இடம். கடந்த பல ஆண்டுகளாக ஒரு சில தனியாரிடம் ஆக்கிரமிப்பிலிருந்தது. தற்சமயம் இது மீட்கப்பட்டு இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, முதலமைச்சரின் அனுமதியோடு மேற்கொள்ளப்படும்.

இதேபோன்று, அங்கப்பன் நாயக்கன் தெருவில் சென்னை உருது நடுநிலைப் பள்ளிக்கு பின்புறம் 1,680 ச.அ. பரப்பளவு கொண்ட மாநகராட்சிக்கும் சொந்தமான இடமும் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. 2011ஆம் ஆண்டு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அன்றைய ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீட்டால் கிடப்பில் போடப்பட்டு மீட்டெடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.  இந்தப் பிரச்சினை குறித்து அன்றைய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூட பொது வெளியில் கருத்து தெரிவித்துள்ளார். பின்னர், இந்தச் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் தெரிவித்து, அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சட்டப்படி இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.

இங்கு அமைந்துள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் 487 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு 90% அதிகமாக சிறுபான்மையின மாணவர்களே பயில்கின்றனர். போதிய கட்டட வசதி இல்லாமல் இப்பள்ளி இயங்கி வருகிறது.  தற்சமயம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பைறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பதிலளிக்கையில், மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், மாநகராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும்,

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை குறித்து ஒரு சிலர் தெரிவித்துள்ள கருத்துக்கு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல் சிறப்பாக செயல்படும் துறையின் மீது அம்புகள் எய்தப்படும் என்ற வார்த்தையை நினைவு கூர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை நல்லதை நோக்கி தொடர்ந்து செயல்படும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி, யாரோடும் பிரதிவாதம் செய்யாமல் குறைகளையும் நிறைவு செய்யும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் பணியாளர்களைக் கூட நிறுத்தவில்லை. யாரையும் நிறுத்தக் கூடாது எனவும், யாரையும் பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

மாநகராட்சியின் அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசு காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி குறித்து மாநில அரசிடம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் பயணச் செலவினங்கள் மற்றும் இதர இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அரசின் சார்பில் வருடத்திற்கு 200 பேரை அழைத்துச் செல்ல ரூ.50 இலட்சம் ஒதுக்கப்படும் என மானியக் கோரிக்கை அறிவிப்பு எண்.27ல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்பேரில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கும் ஒன்றிய அரசின் காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றிப் பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.  இதற்கு சிறந்த உதாரணம், கடந்த ஆண்டு சிவராத்திரி திருவிழாவானது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக அருள்மிகு காளிகாம்பாள் திருகோயிலில் நடத்தப்பட்டது.  இந்த ஆண்டு சிவராத்திரி திருவிழா 5 இடங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் நமது மாநிலத்தில் உள்ள இராமேஸ்வரம் கோயிலுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர்.  இந்தக் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து முதலமைச்சர் ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுப்பார். தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது.  திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட செயல்திட்டக் குழு செயல்பட்டு வருகிறது.  மாண்புமிகு நீதியரசர் அவர்கள் 5 பேர் கொண்ட குழுவினை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள். அந்தக் குழு அமைக்கப்பட்டு கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.  அவர்களின் அறிக்கையை பின்பற்றி ஆகம விதிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம். சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஸ்ரீ ராமுலு, மாமன்ற உறுப்பினர் ஆசாத், மண்டல அலுவலர் மற்றும் செயற்பொறியாளர்கள்  உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Minister ,Zegarbabu , Legal action to recover state-owned encroachments will continue: Minister Shekharbabu
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...