அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் டிரைவர் என கூறி ₹37.5 லட்சம் மோசடி-சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

சேலம் : முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கார் டிரைவர் என்று கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக ₹37.5 லட்சம் மோசடி செய்ததாக  பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவரது சகோதரர் காசிவிஸ்வநாதன் மற்றும் உறவினர்கள் சீனிவாசன், சுமதி ஆகியோர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சுதாகரன் என்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் கார் டிரைவராக பணியாற்றி வருவதாக கூறினார். பின்னர், தனக்கு அமைச்சர்களுடன் பழக்கம் இருப்பதாகவும்  அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை காண்பித்தும் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். அதோடு சென்னை தலைமை செயலகத்திற்கு அழைத்துச் சென்று அலுவலகத்தில் ஒரு சிலரை அறிமுகப்படுத்தினார். கட்டாயமாக அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி எங்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டார்.

 எங்கள் அனைவருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் பத்திரவு பதிவு துறையில் லெவல் 1, லெவல் 2, லெவல் 3, லெவல் 4 என பணியும், கிராம நிர்வாக அலுவலர் பணியும் வாங்கித் தருவதாக கூறினார்.  இந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 9 பேரிடம் இருந்து ₹37.5 லட்சத்தை பெற்று விட்டார். பின்னர், சுதாகரன் இதற்காக போலியாக பணி ஆணைகளை தயார் செய்து எங்களுக்கு வழங்கியுள்ளார்.

அந்த ஆணைகள் அனைத்தும் போலி என்பது பின்னரே தெரியவந்தது. இதனால் வேலை வாங்கித் தருவதாக கூறி சுதாகரன் மோசடி செய்ததை அறிந்தோம். இதையடுத்து நாங்கள் பணம் கேட்டு சென்ற போது சுதாகரனும், அவரது மனைவி பிரபாவதியும் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டினர்.  எங்களது பணத்தை பெற்று சுதாகரன் சொத்துகளை வாங்கியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியின்போது 2020ல் நடந்தது.எனவே சுதாகரன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் 9 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக ₹37.5 லட்சத்தை சுதாகரன் பெற்றுள்ளார்.  மேலும் ஈரோடு, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இது போன்று ஏமாற்றி உள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் உதவியாளராக இருக்கிறேன் என கூறி கலெக்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறையில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எங்களிடம் காட்டி ஏமாற்றியுள்ளார்,’’ என்றனர்.

Related Stories: