சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் உடன் செல்வது நான் இல்லை: நீதிமன்றத்தில் சுவாதி கண்ணீர்..!

மதுரை: சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜ் உடன் செல்வது நான் இல்லை என நீதிமன்றத்தில் சுவாதி பதில் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் இறந்தவர்கள் இருவர் போக  யுவராஜ் உட்பட 15 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து கடந்த 8.5.2019ல் மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்திற்கு (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) மாற்றப்பட்டது. இதில், யுவராஜ், டிரைவர் அருண் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 10 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை; இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சி பிறழ் சாட்சியாக மாறியது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது சாட்சி கூண்டில் சுவாதி நிறுத்தப்பட்டிருந்தார். அதற்கு அருகே வைக்கப்பட்டிருந்த டிவியில் 23.6.2015ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி திரையிடப்பட்டது. அந்த திரையில் கோகுல் ராஜும் சுவாதியும் கோவிலில் இருந்து உள்ளே வருவது, வெளியே வருவது மற்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கக்கூடிய காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

அதற்கு அழுதபடியே அந்த படத்தில் தெரிவது நான் இல்லை என சுவாதி கூறினார். இவ்வளவு பெரிய திரையில் உங்கள் படம் தெளிவாக தெரிகிறது. ஆனால் நீங்கள் இல்லை என்று சொக்கிறீர்கள், உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இவ்வளவு பெரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளீர்கள். எனவே உண்மையை சொன்னால் நன்றாக இருக்கும்.

பொய் சொன்னால் தொடர்ந்து உங்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள நேரிடும் என சுவாதியை நீதிபதிகள் எச்சரித்தனர். மீண்டும் மீண்டும் திரையில் அந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுவாதி மறுப்பு தெரிவித்து வருகிறார். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை. கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறி வருகிறார். இந்த வாக்குமூலத்தை நீதிபதிகள் பதிவு செய்து வருகின்றனர். 

Related Stories: