×

ராஜஸ்தானில் கெலாட் - பைலட் இடையே தொடரும் மோதல்: சமாதானப்படுத்த காங்கிரஸ் முயற்சி

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடைபெற்று வரும் வார்த்தை மோதல் உச்சம் அடைந்துள்ளது. சமீபத்தில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த முதலமைச்சர் அசோக் கெலாட் கடந்த 2020ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொடி பிடித்து தனது ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் என்று குற்றம் சாட்டினார். சொந்த கட்சியின் அரசை கலைக்க முயன்ற ஒருவரை ராஜஸ்தான் முதலமைச்சராக ஆக்க முடியாது என கூறிய கெலாட், சச்சின் பைலட் முதல்வராக பதவி வகிக்க தகுதி இல்லாத துரோகி என்றும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பைலட் பேரம் போசியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கெலாட் தெரிவித்தார். சச்சின் பைலட் தவிர காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் முதலமைச்சராக நியமிக்கலாம் என்றும் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட் அவதூறு வார்த்தைகளை பேசுவது கெலாட் போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகல்ல. இது ஒருவர் மீது ஒருவர் மண்ணை அள்ளி வீசுவதற்கான நேரம் அல்ல. ராகுல் காந்தியின் நாடு தழுவிய ஒற்றுமைப் பயணத்தை வெற்றியை அடைய வைப்பதற்கு கூட்டாக ஒன்றிணைந்து நாம் உழைக்க வேண்டிய நேரம். ராஜஸ்தானில் அடுத்த மாதம் ராகுல் பயணம் தொடங்க உள்ளது என்று கூறினார்.

இதனிடையே முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையேயான மோதலுக்கு தீர்வு காணும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


Tags : Khelat-Pilot conflict ,Rajasthan ,Congress , Khelat-Pilot conflict continues in Rajasthan: Congress tries to pacify
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்