தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் குளிர்சாதன பேருந்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

தாம்பரம்: தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான அரசு குளிர்சாதன மாநகர பேருந்து (தடம் எண் 21டி) நேற்று மதியம் பிராட்வே பகுதியில் இருந்து பயணிகளுடன் தாம்பரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர்.

உடனே, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் முத்து, பேருந்தை ஜிஎஸ்டி சாலையில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகிலுள்ள கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியாததால், தாம்பரம் தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் பக்கத்தில் தானே பணிமனை உள்ளது. எனவே, பேருந்தை அங்கு கொண்டுசென்று தீயை அணைத்து கொள்ளுங்கள் என கூறி பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனால், பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துகொண்டே இருக்கும் நிலையில் அதை எப்படி இயக்க முடியும், என தீயணைப்பு வீரர்களுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சக போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலையை செய்தனர். தீவிபத்து விபத்து குறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணம் என தெரியவந்தது.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: