×

தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளருக்கு 5ம் தேதிக்குள் ஊதியம்: ஆணையர் உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் இளங்கோவன் உறுதியளித்தார். தாம்பரம் மாநகராட்சியில் 1200க்கும் மேற்பட்ட தற்காலிக, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், அம்மா உணவகம், அம்மா குடிநீர், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையாக குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்ததாரர்கள் ஊதியம் வழங்குவதில்லை. அடையாள அட்டை கூட இல்லாமல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சிகளில் உள்ள 20 வகையான நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணை 152ஐ எதிர்த்து, கடந்த 21ம் தேதி தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதில், தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன், தொடர்ச்சியாக தொழிலாளர்கள் அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன், காரணமாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார்.

இதன்படி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகளுடன், சிஐடியு தென்சென்னை மாவட்ட செயலாளர் பா.அன்பழகன், உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் கே.சி.முருகேசன், என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அப்பனு, எஸ்.குமாரதாசன், ராஜன்மணி, ரவிச்சந்திரன், சுகந்தி, சாந்தி, குழந்தைசாமி, மனோகரன் உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த, பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அப்போது, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
மாதம்தோறும் 5ம் தேதி ஊதியம் வழங்கப்படும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை தருவதோடு, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்ட் முறை அமல்படுத்தி, இஎஸ், இபிஎப் தரப்படும். பெண் தொழிலாளர்களுக்கு உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி தரப்படும். மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் ஊதியம் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்.

ேமலும், அனைத்து மண்டலங்களிலும் துணை ஆணையர், ஏஎச்ஓ, துணை பொறியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சுகாதார அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். நிரந்தர தொழிலாளர்கள் அனைவருக்கும் பணிப்பதிவேடு பராமரிக்கப்படும். பணிப்பதிவேடு இல்லாத தொழிலாளர்கள் உடனடியாக மனு செய்ய வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க முன்னுரிமை வழங்கப்படும்.

அம்மா உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை தரப்படும். ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள காலதாமதம் சரி செய்யப்படும்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாநகராட்சி பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இபிஎப் தொகை செலுத்தியுள்ள நிலையில், நிர்வாகம் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தும், இவை அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், அரசாணை 152ஐ ரத்து செய்வது, ஒப்பந்தம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது, கொரோனா கால நிவாரணம் போன்றவை குறித்த தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tambaram Corporation , Thambaram Municipal Corporation, contract labour, pay by 5th, commissioner confirmed
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...