×

கிரிப்டோ கரன்சியில் முதலீடு ெசய்வதாக பெண் தொழிலதிபரிடம் ரூ.22 கோடி மோசடி செய்தவர் கைது

சென்னை:  சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை போரக்ஸ் டிரேடிங் செய்வதற்காக சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (45) என்பவர் அறிமுகமானார். அவர் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முதலீடு ெசய்தனர்.

பிறகு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று சந்திரசேகரன் என்னிடம் கூறினார். அதேநேரம், போரக்ஸ் டிரெடிங்கில் உள்ள முதலீடுகளை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றி வர்த்தகம் செய்வதாக கூறினார். இதில் நமக்கு அதிகளவில் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதன்படி, நான் ரூ.22 கோடி பணத்தை முதலீடு செய்தேன். முதலீடு செய்த பணத்தில் ஒவ்வொரு மாதமும் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் அவர், சொன்னபடி பணத்தை தரவில்லை. அதற்கு பதில் 2 சதவீதம் மட்டுமே அதாவது, முதலீடு செய்த ரூ.22 கோடியில் ரூ.41 லட்சம் மட்டும் எனது வங்கி கணக்கிற்கு சந்திரசேகரன் அனுப்பினார். அதன்பிறகு எந்த பணத்தையும் எனக்கு தரவல்லை. நான் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டபோது அவர் முறையாக பதில் கூறவில்லை. எனவே அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, விசாரணை நடத்த கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, கிரிப்டோ கரன்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.22 கோடி பணம் பெற்றது போல் பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்திரசேகரனை நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் பகுதியில் கைது செய்தனர்.

Tags : Crypto currency, woman entrepreneur, Rs 22 crore scam
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...