சென்னை விமான நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு எலக்ட்ரிக் சார்ஜ் வசதி

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்பகுதியில், மின்சார வாகனங்களுக்கு எலக்ட்ரிக் சார்ஜ் ஏற்றுவதற்கான பாயின்ட்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. விமான நிலைய ஆணையம் மற்றும் விமான நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் இனிமேல் விமானநிலையத்தின் உள்ளேயே சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். சென்னை விமான நிலையத்தில், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து உள்பகுதி, விமானங்கள் நிறுத்தும் வான்வழி பகுதியில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யப்படும் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், விமான நிலையத்தில் மாசு பரவுதை குறையும். அதோடு, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும், அவர்களின் வாகனங்களை உடனடியாக மின்சார வாகனங்களாக மாற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் செலவை குறைப்பதோடு, மாசு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.

இப்போது சென்னை விமான நிலையத்தில் 15 கிலோ வாட் மற்றும் 7 கிலோ வாட் உடைய இரண்டு சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தேவைகளை பொறுத்து மேலும் சில பாயிண்ட்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் சார்ஜிங் பாய்ண்ட்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, செல்போன் ஆப் மற்றும் ஆர்எப்ஐடி எனப்படும், ரேடியோ அலைவரிசை அடையாளக் கோடு வாயிலாகவும் சார்ஜிங் நிலையத்தை பயன்படுத்த முடியும்.

இந்த புதிய எலக்ட்ரிக் சார்ஜிங் பாய்ண்ட்களை சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் அசோகன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: