×

நூலகத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்ய புத்தக வெளியீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம், சென்னை அண்ணா நூலகத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்ய புத்தக வெளியீட்டாளர்களிடம் இருந்து நூல்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகம் மற்றும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றிற்கு தேவையான நூல்கள், மின் நூல்கள் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு நூலகம் அடித்தளம் மற்றும் தரைத்தளம் முதல் ஆறு தளங்களுடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணினி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உள்பட அனைத்து பாடங்களிலும் புகழ்பெற்ற நூல்கள் அமையப்பெறும்.

இந்த நூலகம் வாசகர்களுக்கு நூல்களை இரவல் வழங்கும் நூலகமாகவும், குறிப்புதவி நூலகமாகவும் செயல்படும். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் நூல்கள், நூலக சேவைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும். இந்த நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, உரிய படிவத்தில், வெளியிடப்பட்டுள்ள நூல் விவரங்களை பூர்த்தி செய்து  மாதிரி படியுடன் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை என்ற முகவரிக்கு டிசம்பர் 9ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், நூல்களின் பட்டியலை கீழ்குறிப்பிட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதள முகவரியில்  (www.annacentenarylibrary.org) அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Government , Purchase of Books for Library, Book Publishers Can Apply, Tamil Nadu Govt Notification
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...