அதிமுக ஆட்சியின்போது சிமென்ட் நிறுவனத்தில் 100 கோடிக்கும் மேல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த கோரி மனு: ஊழல் கண்காணிப்பு துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில், ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்களின் வரிப்பணத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தில், கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவன பதவி உயர்வு உள்ளிட்டவைகளிலும் விதி மீறல் நிகழ்ந்தது.

கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான இ டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த முறைகேடு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ஊழல் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: