×

 பருப்பு, பாமாயில் இறக்குமதியில் வரிஏய்ப்பு செய்த விவகாரம் தமிழகத்தில் 5 நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை: பினாமி பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கின

சென்னை: வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் விடிய விடிய 2 வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாநில அரசுகளின் பொதுவிநியோக திட்டத்துக்கு பருப்பு மற்றும் பாமாயில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காமாட்சி அண்ட் கோ, அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இண்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் என 5 பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து விநியோகம் செய்து வருகிறது.

இந்த திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்யும் வகையில் காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல டன் அளவுக்கு மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றன. துறைமுகத்தின் வழியாக கொடுக்கப்பட்ட இறக்குமதி கணக்கு மற்றும் இறக்குமதி செய்த காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்கள் கொடுத்த ஆண்டு கணக்கிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கொள்முதல் செய்த பருப்பு மற்றும் பாமாயில் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தின் குடோன் மற்றும் அதன் உரிமையாளர் வீடு, காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தின் கணக்காளர் வீடு, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் நிறுவனம், தண்டையார் பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழுகிணறு பகுதியில் உள்ள ஹிராஜ் டிரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகிரேடட் சர்வீஸ், அண்ணாநகரில் உள்ள அலுவலகங்களில் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் சோதனை நடந்தது.

இரண்டாவது நாளாக நேற்றும் விடிய விடிய நடந்த சோதனையில், 5 நிறுவன உரிமையாளர்கள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் தொடங்கி அதில் பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்து இருப்பதற்கான ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த போலி நிறுவனங்கள் அனைத்தும் பினாமிகள் பெயரில் தொடங்கி உள்ளதாக சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து 5 நிறுவன உரிமையாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்தனர். இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு பணி முடிந்த பிறகு தான் இந்த 5 நிறுவனங்களும் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,benami , Tax evasion on import of pulses, palm oil, 5 companies raided for second day in Tamil Nadu: documents of foreign investments in benami names caught
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...