×

காவல்துறையில் உயரதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு முழு அதிகாரம் அளிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: காவல்துறையில் உயர் அதிகாரிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறை, டிஜிபி தலைமையின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்துக்கு 11 சரகங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, மதுரை, கோவை என 9 காவல் ஆணையரகங்கள் உள்ளன. 37 காவல் மாவட்டங்கள், 2 ரயில்வே காவல் மாவட்டங்கள் உள்ளன. இதுதவிர ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பி தலைமையில் 248 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 1,305 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து மற்றும் புலனாய்வு காவல் நிலையங்கள், 27 புற காவல் நிலையங்கள் உள்ளன.

மேலும், நுண்ணறிவு பிரிவு, சிபிசிஐடி, சிவில் சப்ளை சிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு, மாநில குற்ற ஆவண காப்பகம் என பல்வேறு பிரிவுகளில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 491 போலீசார் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பலர் உயரதிகாரிகள் மீது புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தமிழக காவல்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி தமிழக காவல்துறையில் உயரதிகாரிகள் மட்டத்தில் தவறு செய்யும் நபர்களை தண்டிக்கும் வகையில் அரசாணை ஒன்றை உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில், தமிழக காவல் துறையில் கீழ்மட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் அளிக்கும் புகார்களை இனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புகார்கள் மீது விசாரணை அதிகாரியை டிஜிபி அனுமதி பெற்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமனம் செய்து வழக்கை விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு 6 மாதத்தில் அறிக்கையை அளிக்க வேண்டும். மாநகர ஆணையரகங்களில் கூடுதல் கமிஷனர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் உறுப்பினர்களாக துணை கமிஷனர்கள் நியமிக்கப்படுவார். அதேபோல் மாவட்ட வாரியாக துணை கமிஷனர்கள் தலைமையிலும், குழு உறுப்பினராக உதவி கமிஷனர்கள் இருப்பார்கள். ஆயுதப்படையில் கமாண்டன்ட் தலைமையில் துணை கமாண்டன்ட் மற்றும் மூத்த உதவி கமாண்டன்ட் நியமிக்கலாம். இனி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயரதிகாரிகள் மீது அளிக்கப்படும் புகார்களை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : CBCID ,Tamil Nadu , Empowering CBCID to investigate complaints against high-ranking police officials: Tamil Nadu govt issues ordinance
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...