தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றிபெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற செல்வபிரபு, 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம், இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய கோப்பை வளைகோல்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள், 2019 பிப்ரவரி மாதம் சார்ஜாவில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான விளையாட்டு போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகள போட்டிகளில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற பாலசுப்பிரமணியனுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற செல்வராஜுக்கு ரூ.5 லட்சம் காசோலை, குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கல பதக்கங்கள் வென்ற விஜயசாரதிக்கு ரூ.4 லட்சம் காசோலை, ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டியில் 2 வெண்கல பதக்கங்கள் வென்ற கணேசனுக்கு ரூ.4 லட்சம் காசோலை, குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மனோஜ்க்கு ரூ.2 லட்சம் காசோலை, இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிவராஜனுக்கு ரூ.3 லட்சம் காசோலை, குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை நடந்த 36வது தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள் என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.4 கோடியே 29 லட்சத்துக்கான காசோலைகள் என தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சத்துக்கான உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்றுவரை 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: