கடல் பகுதி, வடதுருவத்தில் இருந்து குளிர் காற்று வீசுவதால் பனிப்பொழிவு, கடுங்குளிர் தமிழகத்தில் அதிகரிக்கும்

சென்னை: கடல் பகுதியில்  இருந்தும், வட துருவத்தில் இருந்தும் வீசும் குளிர் காற்று காரணமாக, தமிழகத்தில் இனி அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், குளிரும் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் வட துருவத்தில்  இருந்து குளிர் அலையுடன் கூடிய காற்று வங்கக் கடல் பகுதியில் நுழைந்தது. அதே நேரத்தில் கடல் பகுதியில்  இருந்தும் குளிர் காற்று வீசியது. மழை பெய்ததால் தரைப் பகுதி ஈரப்பதமாக மாறியது. ஆக, இந்த மூன்று காரணங்களும் சேர்ந்து கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் தொடர்ச்சியாக குளிர்காற்று வீசியது.

பொதுவாக, டிசம்பர் மாதம் 15ம் தேதி வாக்கில்தான் தமிழகத்தில் பனிப்பொழிவு மற்றும் குளிர் அதிகம் இருக்கும். ஆனால், கால நிலை மாற்றத்தால் பனிப் பொழிவும் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் நேற்று காலையில் நாம் அனுபவித்த பனிப் பொழிவு. இனி வரும் நாட்களில் அதிகாலையில் தொடங்கி காலை 9 மணி வரைக்கும் இந்த பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளது. தற்போது, தமிழகத்தில் மேகமூட்டம் வானில் இல்லை. அதனால், வட துருவத்தில் இருந்து வரும் குளிர் காற்று அப்படியே பனிப்பொழிவாக மாறுகிறது.

இந்நிலையில், அடுத்த 10 நாட்களில் வடகிழக்கு பருவக் காற்று வீசுவது படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. அதனால் டிசம்பர் மாதம் கடுங்குளிர் இருக்கும். தரைப்பகுதியில் இருக்கும் ஈரப்பதம், கடல் பகுதியில்  இருந்து வரும் குளிர் காற்று, வட துருவக் காற்று ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து தரைப்பகுதிக்கு வருவதால் இனி அதிகாலை நேரங்களில் கடுமையான பனி மூட்டம் ஏற்படும். அதனால் எதிரில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கண்ணை மறைக்கும். வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வரும் ஜனவரி 15ம் தேதி வரை இந்த கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காற்று தமிழகத்தில் நீடிக்கும் என்பதால் குளிர் மேலாண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

வட துருவத்தில் இருந்து வீசும் குளிர் காற்று காரணமாக, ஒடிசா முதல் தஞ்சாவூர் வரை உள்ள பகுதிகளில் கடும் குளிர் நிலவும். இங்கு மழை குறையும் போதெல்லாம் இந்த வட துருவக் குளிர் காற்று இங்கு நுழையும். அதனால் பனியுடன் கூடிய குளிர் இருக்கும். அதன்படி இந்த  ஆண்டு விரைவாகவே வட துருவக் காற்று இங்கு வந்துவிட்டது. இது திடீரென ஏற்பட்ட நிகழ்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் பகுதியில்  இருந்து மேகங்கள் தரைப் பகுதிக்கு வந்தால்தான் தரைப்பகுதியில் குளிர்  குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். தமிழர்களின் கணக்குப்படி மார்கழி மாதம் வர வேண்டிய குளிர், கால நிலை மாற்றம் காரணமாக கார்த்திகை மாதத்திலேயே வந்துவிட்டது. இந்த குளிரால் நெல் பயிருக்கு நல்லது. நெல் மணிகள் ஈரப்பதத்துடன் இருக்கும். வன விலங்குகளுக்கும் நல்லது. இருப்பினும் மனிதனுக்கு நல்லதல்ல. வைரஸ் நோய் தாக்கும். இவற்றை நாம் மேலாண்மை செய்து கொள்ள வேண்டும். இந்நிலையில், மலைப் பிரதேசங்களில் இனி குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: