×

 நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற வேண்டும்: வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீலகிரியில் அடையாளம் காணப்பட்ட 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் யூகலிப்டஸ் உள்ளிட்ட அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் பரவி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 53 இடங்களில் அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 16 இடங்களில் இருந்த அந்நிய மரங்களை அகற்றி விற்பனை செய்ததன் மூலமாக  4 கோடியே 2 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய அந்நிய மரங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை 15 நாட்களில் முடித்து நான்கு வாரங்களில் டெண்டர் கோரி அவற்றை அகற்ற வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரித்து விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதேபோல மசினகுடி மற்றும் முதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டெண்டரை இறுதி செய்து மரங்களை அகற்றும் பணியை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அது சம்பந்தமாக டிசம்பர் 22ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags : Nilgiris , Removal of alien trees at 191 places in Nilgiris: Court orders forest department
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்