×

வாடிக்கையாளர் எதுவும் வாங்காத நிலையில் பொருள் வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை எச்சரிக்கை

சென்னை: நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காத நிலையில், அட்டைதாரர் பொருள் வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் நேற்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள், வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வருவதாக பொதுமக்களிடம் இருந்து இணையதளத்தில் புகார்கள் வருகின்றன. இப்படி வழங்கப்படாத பொருட்களுக்கு வழங்கப்பட்டதாக குறுந்தகவல் பெறப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றால், சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கள் மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார்களில் குறிப்பிட்ட முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, கடுமையான தண்டனை வழங்க அறிவுறுத்தி அவற்றை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


Tags : If the customer receives an SMS stating that they have purchased an item when they have not purchased anything, action: Co-operative department alert the employees
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...