×

மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி? நடிகர் யோகி பாபு மூலம் விழிப்புணர்வு குறும்படம்

சென்னை: பொதுமக்கள் மக்கும் குப்பை மற்றும்  மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க  நடிகர் யோகி பாபு மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பை கழிவுகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  

 தரம் பிரிக்கப்படாத குப்பை மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க் கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பெறப்படும் குப்பையில் மக்கும் ஈரக்கழிவுகள் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும், எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும், தென்னை மரக் கழிவுகள் போன்ற தோட்டக் கழிவுகள் நார்கள் மற்றும் பயோ உருளைகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பையை தவிர்த்து மீதமுள்ள குப்பை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பையை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பொதுமக்களிடையே  தரம் பிரித்து வழங்க சென்னை மாநகராட்சி பல்வேறு  விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தி வருகிறது, குறிப்பாக பிரபல பாடகர் ஜி.வி பிரகாஷ் மூலம் ஏற்கனவே குப்பை சம்பந்தமாக பாடல் வெளியான நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மூலம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது, இந்த குறும்படத்தில் யோகிபாபு வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் நடிக்கிறார்.

Tags : Yogi Babu , How to classify biodegradable and non-biodegradable waste? Awareness short film by actor Yogi Babu
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...