×

சிலை கடத்தல் விவகாரம் பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிலை கடத்தல் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து, பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி.யாக இருந்த காதர் பாட்சாபணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், பழவளூர் சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்ப வைக்கவே, அவருடன் கூட்டு சேர்ந்து இந்த வழக்கை விசாரித்த பொன்.மாணிக்கவேல் தன்னை இந்த வழக்கில் சேர்த்ததாக குற்றம்சாட்டினார். இதை விசாரித்த நீதிமன்றம், பொன். மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்தர்பட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நாகமுத்து, பார்த்திபன், ‘பொன்.மாணிக்கவேல் மீது காழ்ப்புணர்ச்சியால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், காதர் பாட்சாவின் குற்றச்சாட்டை சரியான முறையில் ஆய்வு செய்யாமல், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால்ல சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள். பொன்.மாணிக்கவேலின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும்படி காதர் பாட்சாவுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கில் சிபிஐயையும் எதிர்மனுதாரராக சேர்த்தனர். இது தொடர்பான பதில் மனுவை 3 வாரங்களில் தாக்கல் செய்யும்படி  உத்தரவிட்ட அவர்கள், உச்ச நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்தனர். இதில், பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை தொடர நீதிபதிகள் தெரிவித்துள்ளதால், அவரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தும் என்பது உறுதியாகி உள்ளது.

Tags : CBI ,Pon.Manikavel ,Supreme Court , CBI may probe Pon.Manikavel in idol smuggling case: Supreme Court orders
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...