×

25 ஆண்டு தலைவிதியை தீர்மானிக்க போகும் தேர்தல்: குஜராத் பிரசாரத்தில் மோடி பேச்சு

பாலன்பூர்: ‘தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளில் குஜராத்தின் தலைவிதியை தீர்மானிக்கும்’ என்று பிரதமர் மோடி கூறினார். குஜராத் மாநிலம், பாலன்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘‘ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தில் ஏராளமான மேம்பாட்டு திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் மிக பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இத்தேர்தல் வெறுமனே யார் எம்எல்ஏவாக போகிறார்கள், எந்த கட்சி மாநிலத்தை ஆளப்போகிறது என்பதை மட்டும் தீர்மானிக்க போவதில்லை.

இந்த தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கு குஜராத்தில் தலைவிதியை தீர்மானிக்க போகிறது. வளர்ந்த நாடுகளை போல் குஜராத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறேன். குஜராத் மிக பெரிய பாய்ச்சலை சந்திக்க போகிறது.  பலமான ஆட்சி அமைய உங்களுடைய (வாக்காளர்கள்) ஆதரவை எதிர்பார்க்கிறேன். நீங்கள் உங்களுடைய குறைகளை என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த மாநிலத்தில் நான் வளர்ந்ததால் இங்கு உள்ள குறைகள் அனைத்தும் எனக்கு தெரியும். பாஜ அரசு சுற்றுலா, சுற்றுச்சூழல், குடிநீர், கால்நடை வளர்ப்பு, ஊட்டச்சத்து போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தியது.

குறுகிய காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு, மின்சார பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிந்தது. தற்போது, 20 மற்றும் 25 வயது இருக்கும் வாலிபர்களுக்கு குஜராத்தில் முன்பு நிலவிய மோசமான பட்டினி நிலை தெரியாது,’’ என்றார். மொடாசாவில் நடந்த கூட்டத்தில் மோடி பேசும்போது, ‘‘இலவச மின்சாரம் பெறுவதில் இருந்து மின்சாரத்தில் எப்படி வருமானம் ஈட்டுவது என்ற காலம் வந்து விட்டது. மேஹ்சானா மாவட்டம், மோட்டேரா கிராமத்தில் வசிப்பவர்கள் சூரிய  மின் சக்தியை தங்கள் வீடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். உபரி மின்சாரத்தை அரசுக்கு விற்று வருமானம் ஈட்டுகின்றனர்’’ என்று குறிப்பிட்டார். ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  மோடி இவ்வாறு பேசினார்.

Tags : Modi ,Gujarat , Elections to decide 25 years of fate: Modi's campaign speech in Gujarat
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...