சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்: எம்எல்ஏ, கலெக்டர் தொடங்கி வைத்தனர்

செம்பனார்கோயில்: சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணியை எம்எல்ஏ நிவேதா முருகன், கலெக்டர் லலிதா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை பெய்தது. இதனால் சம்பாநடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலூகாக்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000ம் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காட்டில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன், மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000ம் நிவாரண உதவி தொகையை வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணி கிராமம் வைத்தீஸ்வரன் கோயில் ரேஷன் கடையில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கலெக்டர் லலிதா ஆகியோர் ரூ.1000 உதவித்தொகை வழங்கினர். சீர்காழி தாலுகாவில் 99 ஆயிரத்து 518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடி தாலுகாவில் 62 ஆயிரத்து 129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் மொத்தம் ரூ.16 கோடியே 16 லட்சம் வழங்கப்பட உள்ளது.

Related Stories: