×

அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை இரவிலும் செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: அரசு மருத்துவமனைகளில் இரவிலும் இதய அறுவை சிகிச்சை செய்யும் வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், அரசு செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவருக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை இதயப்பிரிவில் உரிய வல்லுநர்கள் இல்லாததால் காலையில் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அவசரத்திற்கு தனியார் மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு கூறினர். அரசு மருத்துவமனைகளில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் உரிய மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. தென் மாவட்ட மக்கள் மதுரை அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். எனவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம், தேனி அரசு மருத்துவமனைகளில் 4டி எக்கோ கார்டியோகிராபி எடுக்கும் வசதியும், 24 மணி நேரமும் இதய அறுவை சிகிச்சை செய்யும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், மனுவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர், மருத்துவ கல்வி இயக்குநர், மதுரை டீன் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Tags : Government secretary , Lawsuit to perform heart surgery at night in government hospitals: Government secretary ordered to respond
× RELATED வண்டலூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட...