×

கொரோனாவை தொடர்ந்து உலகம் சந்திக்கும் அடுத்த தொற்று நோய் என்ன?..மருத்துவ விஞ்ஞானிகள் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனாவைத் தொடர்ந்து உலகம் சந்திக்கப்போகும் அடுத்த பெருந்தொற்று என்ன என்பது குறித்து மருத்துவ விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்துகின்றனர். உலகம் முழுவதும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப நோய்களின் வளர்ச்சியும் தீவிரமடைந்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்கவும் அதற்கான மருந்துகளை உருவாக்கி நோய்களை கட்டுப்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது. உலகளாவிய முதலீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு, குறிப்பாக தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் வழி காட்ட உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு இது போன்று ஆலோசனை செய்த போது தான் கோவிட்-19 என்ற பெருந்தொற்று நோய் கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 300 விஞ்ஞானிகள் கடந்த வாரம் கூடி சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கோவிட்-19, ரத்தக்கசிவு காய்ச்சல், எபோலா வைரஸ் மற்றும் மார்பர்க் வைரஸ், லஸ்ஸா காய்ச்சல், நிபா மற்றும் ஹெனிப வைரல் நோய்கள் குறித்து ஆலோசித்தனர். குறிப்பாக 25 வைரஸ் குடும்பங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் தீவிரமான உலக பெருந்தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமி பற்றி தெரிய வந்துள்ளது. அதற்கு ‘டிசீஸ் எக்ஸ்’ என உலக சுகாதார அமைப்பு பெயர் பட்டியலில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த முன்னுரிமை நோய்க்கிருமிகள் பற்றிய ஆய்வை மருத்துவ விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். இது குறித்து அடுத்த ஆண்டு முதலாம் காலாண்டில் உலக சுகாதார அமைப்பு திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த பெருந்தொற்று ஏற்படும் போது அதனை சமாளிப்பது எப்படி? என்பது குறித்த ஆராய்ச்சியும் தொடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறியுள்ளார்.

Tags : What is the next infectious disease that the world will face after Corona?..Medical scientists advise
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...