×

களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெற்கு வீரவநல்லூர் பீட்டில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வருவாய்துறையினருக்கு சொந்தமான கன்னிப் பொத்தை உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில், வனவர் செல்வசிவா, வனக்காப்பாளர் ராஜ்குமார் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடினார். இதைக்கண்ட வனத்துறையினர் அவரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தெற்கு வீரவநல்லூர், பாரதிநகரை சேர்ந்த முருகன் மகன் செந்தில்வேல் முருகன் (23) என்பது தெரியவந்தது.

விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கட்டிட தொழிலாளியான செந்தில்வேல் முருகன், அவரது கூட்டாளிகளான வெள்ளாங்குழியை சேர்ந்த சேது மகன் மகேஷ் (24), நெல்லை அருகே உள்ள கருப்பந்துறையை சேந்த செல்லபாண்டி (28) மற்றும் இருவர் உள்பட 5 பேரும் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டாக கன்னிப்பொத்தை பகுதியில் நாய்களை வைத்து விரட்டியும், கன்னி வைத்தும் முயல். உடும்பு, காட்டு பூனை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடியுள்ளனர். பின்னர் விலங்குகளில் கறியை சமைத்து அங்கு வைத்தே சாப்பிடவும் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட செந்தில்வேல் முருகன் செல்போனில் அவர்கள் வேட்டையாடிய வனவிலங்குகளுடன் எடுத்த படங்களும் சிக்கியுள்ளன.

இந்த படங்களை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதில் காட்டு பூனை அரியவகை விலங்காகும். விசாரணைக்கு பின்னர் செந்தில்வேல் முருகனை வனத்துறையினர் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷ் என்பவரை வீரவநல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கடந்த 17ம்தேதி கைது செய்துள்ளனர். அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாகியுள்ள செல்லபாண்டி உள்பட மூவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சமூக விரோதிகள் வேட்டை நாய்கள் மூலமும், சுருக்கு வேலி, மின் வேலி அமைத்தும், நாட்டு வெடிகுண்டுகளை பழங்களில் வைத்தும் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறை சிறப்பு படையினர் 70 பேர் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் எச்சரித்துள்ளார்.

Tags : Kalakadu , Gang poaching wildlife in Kalakadu foothills: Photos released
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...