குமரி மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கைகள் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் நடவடிக்கை எடுப்பாரா?

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே மண்டலத்தின் பொதுமேலாளர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையம் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் ரயில் பயணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் - சென்னை தினசரி ரயில் சேவை: தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து தலைநகர் சென்னைக்கு தனித்தனியாக தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது.

குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆன்மீக யாத்ரீகர்கள், குமரி மாவட்ட பயணிகள் என அனைவரும் சென்னைக்கு செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை நம்பி உள்ளனர். இவ்வாறு சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவை சார்ந்த பயணிகள் கணிசமான அளவில் பயணம் செய்கின்றனர். இதர மாவட்டங்களுக்கு தனித்தனி ரயில்கள் உள்ளது போன்று குமரி மாவட்ட பயணிகளுக்கு மட்டும் பயன்படும் வகையில் சென்னைக்கு செல்ல தனியாக இந்த தாம்பரம் ரயில் மொத்தம் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே ரயில் வசதி உள்ளது. ஆகவே நாகர்கோவிலிருந்து தற்போது தாம்பரத்திற்கு செல்லும் இந்த வாரம் மூன்று முறை ரயிலை தினசரி ரயிலாக அறிவித்து இயக்க வேண்டும்

நாகர்கோவில் - சென்னை ஞாயிறு சிறப்பு ரயில்: நாகர்கோவிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5:00 மணிக்கு புறப்படுமாறு ஓர் சிறப்பு ரயில் கடந்த பத்து ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத பிப்ரவரி மாதம் கூட இந்த ரயில் காத்திருப்போர் பட்டியல் உடனே இயங்குகிறது. இந்த ரயில் நாகர்கோவில் பணிமனையில் உள்ள நாகர்கோவில் - காந்திதாம் ரயில் மூன்று நாள் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளை வைத்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படுவதால் வார விடுமுறை முடித்து சென்னைக்கு செல்லும் பயணிகளால் நிரம்பி காத்திருக்கும் பட்டியல் உடனே இயங்கி ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.

இந்த ரயிலை இயக்க தேவையான பெட்டிகள், கால அட்டவணையின் கூடிய வழித்தடம், பராமரிப்பு பணிகள் போன்ற அனைத்தும் இருந்தும் இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் இதுவரை முன்வரவில்லை. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தில் இது போன்று இரண்டு நாள் காலியாக நிற்கும் ரயில் பெட்டிகளை வைத்து திருவனந்தபுரம் - சென்னை, எர்ணாகுளம் - பெங்களுர் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாராந்திர ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். மங்களுர் ரயில் நீட்டிப்பு: கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.

இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் 16347-16348 ரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். சார்மினார் ரயில் நீட்டிப்பு:  ஐதராபாத்துக்கு செல்ல நேரடி தினசரி ரயில் வசதி இல்லை. திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் தினசரி சென்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, மங்களூரு, கோவை போன்ற நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஐதராபாத்துக்கு மட்டும் வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. தற்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரயில்வே மண்டலம் ஐதராபாத்திலிருந்து காசிபட், விஜயவாடா வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் தினசரி ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க ரயில்வே கால அட்டவணை மாநாட்டில் திட்ட கருத்துரு சமர்ப்பித்துள்ளது. இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

திப்ருகார் ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க வேண்டும்:

ரயில்வே துறை கன்னியாகுமரியிலிருந்து அஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர்க்கு தினசரி புதிய ரயில் இயக்க திட்டமிட்டு வாரத்துக்கு இரண்டு நாள் செல்லும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயிலை தமிழக பயணிகள் பயன்படும் வகையில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும். சென்னைக்கு செல்ல ஓர் தினசரி ரயில் சேவை நமக்கு கிடைக்கும். கன்னியாகுமரியிலிருந்து தற்போது இயக்கப்படும் திப்ருகர் ரயில் கேரளா வழியாக சுற்றி செல்வதால் குமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பதை தவிர்க்கின்றனர். ஆகவே இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும்.

திருநெல்வேலி  திருவனந்தபுரம் பயணிகள் ரயில்: திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு நேரடியாக போதுமான அளவில் பயணிகள் ரயில்கள் இயக்காத காரணத்தால் தினமும், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்ல போதுமான பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்களில் திருவனந்தபுரத்திலிருந்து காலையில் நாகர்கோவிலுக்கு புறப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதைப்போல் தற்போது இயங்கும் திருநெல்வேலி  நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - கொச்சுவேளி பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி- கொச்சுவேளி என்று இயக்க வேண்டும்.

* தெற்கு ரயில்வே பொதுமேலாளர் நாளை ஆய்வு

தெற்கு ரயில்வே பொதுமலோளர் ஆர்.என்.சிங் குமரி மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தெற்கு ரயில்வே பொதுமேலாளராக ஆர்.என்.சிங் கடந்த 8ம் தேதி பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் கோட்ட வாரியாக அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி -திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகள், நாகர்கோவில் டவுன் ரயில்நிலைய மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.என்.சிங் திருவனந்தபுரம் சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே ரயில்பாதைகள், ரயில்நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக இன்று (24ம் தேதி) சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மாலை 5.20க்கு புறப்படுகிறார். வெள்ளிக்கிழமை (25ம் தேதி) காலை 5.45 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேருகிறார். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஆய்வுக்கான சிறப்பு ரயிலில் புறப்படும் அவர் கன்னியாகுமரி -திருவனந்தபுரம் ரயில்பாதையில் ஆய்வு மேற்கொள்கிறார்.

காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். 11 மணி முதல் 12.30 மணி வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் நேமம் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்யும் அவர் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து எர்ணாகுளம் செல்கிறார். 26ம் தேதி எர்ணாகுளம், பாலக்காடு வழியாக மங்களூர் வரை அவரது ஆய்வு நடக்கிறது.

Related Stories: