×

திருவண்ணாமலை தீபத்திருவிழா 27ம் தேதி கொடியேற்றம்: இன்றிரவு துர்க்கை உற்சவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள், அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து, அன்று காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். அடுத்தமாதம் 2ம் தேதி 6ம் நாள் விழாவில் காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும்.

வரும் 3ம் தேதி 7ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும். அன்று மாட வீதியில் பஞ்சரதங்களும் பவனி வரும். பின்னர், 4ம் தேதி 8ம் நாள் காலை உற்சவத்தில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலை பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். வரும் 5ம் தேதி 9ம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். அதைத்தொடர்ந்து, வரும் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக 3நாட்கள் காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, எல்லை தெய்வ வழிபாட்டின் முதல் நாளான இன்றிரவு  துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது. சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து, இரவு 8 மணி அளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் பவனி வருகிறார். அதைத்தொடர்ந்து, நாளை பிடாரி அம்மன் சிம்ம வாகனத்திலும், நாளை மறுதினம் 26ம் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் பவனி வர உள்ளனர்.


Tags : Tiruvandamalai Dipadhipa Festival ,27th Flagship , Tiruvannamalai Deepatri Festival 27th Flag Hoisting: Durga Utsavam Tonight
× RELATED கார்த்திகை தீபத்திருவிழாவை...