×

மாஸ்க் கூட அணியாமல் கத்தாரில் கொண்டாட்டம்: உலகக்கோப்பை கால்பந்து திருவிழா என்ன வேறு கிரகத்திலா நடக்கிறது?..சீனா காட்டம்

பீஜிங்: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், தற்போது கத்தாரில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலகக்கோப்பை போட்டிகளை காண, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள், கத்தாரில் குவிந்துள்ளனர். இந்த முறை தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெறாததால் சீனா, உலகக்கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் கால்பந்து விளையாட்டு, சீன மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகிறது. எனவே சீனாவில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள், உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண, கத்தாருக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

சீனாவில் கடந்த 6 மாதங்களாக மீண்டும் ஆங்காங்கே கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது சீனாவில் 28 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மீண்டும் பழைய மோசமான நிலை உருவாகி விடக் கூடாது என்பதால் ‘சீரோ கோவிட்’ என்ற இலக்கை நோக்கி, சீன அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய கொரோனா பரவலை தடுக்க, அந்நாட்டில் மாகாண அளவிலான அரசுகள் லோக்கலாக ஆங்காங்கே லாக்-டவுனை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கத்தாரில் உலகக்கோப்பை போட்டிகளை காண வந்துள்ள ரசிகர்கள், குறைந்தபட்சம் மாஸ்க் கூட அணியாமல் சுற்றித் திரிவது, சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், மீண்டும் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட காரணமாக இருந்து விடக் கூடாது என்று சீனா கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ‘உலக அளவில் இன்னும் முற்றிலுமாக கொரோனா அபாயம் நீங்கி விடவில்லை. மைதானங்களுக்கு செல்லும் பஸ்களில் ரசிகர்கள், கூட்டம் கூட்டமாக பயணம் செய்கின்றனர். அதிலும் அந்த பஸ்கள் அனைத்தும், குளிரூட்டப்பட்ட வசதிகள் உடையவை.

உலகக்கோப்பை கால்பந்து வேறு கிரகத்திலா நடக்கிறது? பல்வேறு வடிவங்களில், புதிய பரிணாமங்களில் இந்த நோய்த் தொற்று, இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க, கால்பந்து ரசிகர்கள் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அவசியம் மாஸ்க் அணிய வேண்டும். தற்போது சீனாவில் இருந்து கத்தாருக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கத்தார் சென்று வரும் சீனாவை சேர்ந்த மக்கள், தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.


Tags : Qatar ,World Cup football festival ,China Katam , Celebrating in Qatar without even wearing a mask: World Cup football festival is happening on what other planet?..China Katam
× RELATED சில்லிபாயின்ட்…