பால் விலையை குறைக்ககோரி தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன் பங்கேற்பு

தண்டையார்பேட்டை: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆவின் பால் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், சக்தி வடிவேல், ஜவஹர்பாபு, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜு சாக்கோ, முனவர்பாட்சா, அருண்குமார், பாலா, மாவட்ட நிர்வாகிகள் பத்மநாபன், அசோகன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் நிருபர்களிடம் ஜி.கே.வாசன் பேசுகையில், தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ அரசு மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வரும். மத்தியில் பாஜ அரசு, மாநிலத்தில் அதிமுக-பாஜவுடன் தமாகா கூட்டணியில் உள்ளது. மக்கள் பிரச்னைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது தமாகாதான் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Related Stories: