×

இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்

கீவ்: தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, ரஷ்யா ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ‘மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்’ என ரஷ்யாவின் இந்த தாக்குதலை கண்டித்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:

எங்கள் நாட்டில் உள்ள அணு மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம், ஏவுகணைகளை வீசி சரமாரியாக தாக்கி கொண்டிருக்கிறது. இதன் மூலம் ‘பயங்கரவாதத்தின் புதிய பரிணாமத்தை’ ரஷ்யா துவக்கியுள்ளது. ஷப்போரிஷியா பகுதியில் உள்ள நாட்டின் மிகப்பெரிய அணு மின் நிலையம் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 80 சதவீதம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் இருளில் தவித்து கொண்டிருக்கின்றனர்.

கடும் குளிர் காலமான தற்போது மின்சாரம் இல்லாமல், தண்ணீர் இல்லாமல், உணவு பொருட்களை சமைக்க தேவையான வெப்பம் இல்லாமல் எங்கள் நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர். நேற்று முன்தினம் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் குண்டு வீச்சில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மின் விநியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சைகளை உடனடியாக அளிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால் உக்ரைனின் தெற்கு எல்லையில் உள்ள மால்டோவா நாட்டிலும், மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மால்டோவா நாட்டின் மீது ரஷ்யா நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

* பிறந்த குழந்தை பலியான பரிதாபம்
நேற்று முன்தினம் தெற்கு ஷப்போரிஷியா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யா ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. அந்த மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தையின் தாய் மட்டுமே சிகிச்சையில் இருந்தார். அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர், குழந்தையின் தாய் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

உக்ரைன் ராணுவத்தின் அவசர கால மீட்பு படையினர், கடும் போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையின் தாய் மற்றும் டாக்டரை மீட்டனர். உக்ரைனின் ராணுவ தளபதி வேலாரி சலுஷ்னிய் கூறுகையில், ‘‘ஷப்போரிஷியா மீது ரஷ்யா 67 சக்தி வாய்ந்த ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியது. ஆனால் உக்ரைனின் விமானப் படை, இவற்றில் 51 ராக்கெட் குண்டுகளை வெற்றிகரமாக மறித்து, தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் பின்னரும் ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தது’’ என்று தெரிவித்தார்.

Tags : Ukraine ,Russia , Ukraine's people in the dark: Russia attacks power plants
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...