செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டத்தில் இன்று கடும் பனிப்பொழிவு: வீடுகளில் முடங்கிய மக்கள்

செங்கல்பட்டு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த 10 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சாரல் மற்றும் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மார்கழி மற்றும் தை மாதங்களைப் போல் கடும் பனிபொழிவு காணப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு புறவழிச் சாலை, காஞ்சிபுரம் செல்லும் சாலை, பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் மற்றும் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர் புகைமண்டலமாக பனி கொட்டியதால், அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன.

இதனால் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள், கடும் பனிப்பொழிவினால் தங்களின் உடல்நலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் வீடுகளுக்குள்ளே முடங்கினர். பின்னர் காலை 8 மணிக்கு மேல் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அதிகாலை ரயிலை பிடித்து வேலைக்கு சென்று வருபவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன்காரணமாக மார்கழி, தை மாதங்களைப் போல் காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் காணப்பட்டது.

இன்று காலை சுமார் 8.30  மணிவரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிக்கரை, ரயில் நிலையம், அய்யங்கார்குளம், புஞ்சை அரசன்தாங்கல்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. ஊட்டியில் உள்ளது போல பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனங்கள் சிறிது தூரத்தில் மட்டுமே தெரிந்ததால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

* திருவள்ளூரிலும் பனிமூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்துவந்த நிலையில், இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் ஆட்கள் வருவது கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், விளக்கு வெளிச்சத்தில் சிரமப்பட்டு சென்றனர். பனிப்பொழிவு காரணமாக வயதானவர்கள், வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கினர்.திருவள்ளூர் ரயில் நிலையங்களில் 8 மணி வரை பனி மூட்டத்தால் எந்த நடைமேடையில் ரயில் வருகிறது என்று தெரியாமல் மேம்பாலத்தின் மீது நின்று பார்த்துவிட்டு அதன் பின் ரயிலில் பயணிகள் பயணித்தனர்.

Related Stories: